மாற்று எரிபொருள்

கற்பனை செய்துக்கொள்ளுங்கள், காலப்பயணம் செய்து 1985 ஆம் வருடத்திற்கு போகிறோம், பெட்ரோல் பங்கில் பைக்கை நிறுத்தி “100 ரூபாய்க்கு பெட்ரோல் போடுப்பா !” என்று சொன்னால்! பெட்ரோல் பங்கில் வேலை செய்பவர் வாயை பிளந்திருப்பார். ஏனென்றால், அன்று 100 ரூபாய்க்கு 14 லிட்டர் பெட்ரோல் கிடைத்திருக்கும்.

ஆமாம்.. 85 வது வருடம் பெட்ரோலின் விலை ஏழு ரூபாய், டீசல் இரண்டரை ரூபாய் ! இன்று நிலை என்ன ? ஒரு லிட்டர் 77.15 பைசா ( 16.5.17) விகிதாச்சாரத்தில் பார்த்தால் புரியும்... பெட்ரோல், தங்கம் விலை ஏறிய அளவுக்கு வேறெந்த பொருட்களின் விலையும் ஏறவில்லை !

வேறு வழி இல்லை, நாளையே 100 ரூபாய்க்கு போனாலும், இரண்டு நாட்கள் திட்டிவிட்டு மூன்றாவது நாள் பெட்ரோலுக்காக அலையத்தான் போகிறோம். ஏனெனில் இன்று வாகனங்கள் இன்றி நம் வாழ்க்கையே இல்லை !

சரி, இன்னும் எத்தனை வருடங்களுக்கு பெட்ரோல் நமக்கு கிடைக்கும் ?

பெட்ரோல் முழுவதும் தீர்ந்துவிட்டால் என்ன செய்வது ?

அதற்கான மாற்று ஏற்பாடுகளை வைத்திருக்கிறோமா ?   

அப்படி மாற்று கிடைத்தாலும், நாம் தற்போது வைத்திருக்கும் வாகனங்களுக்கு அந்த எரிபொருள் செட்டாகுமா ?

இப்படி பலப்பல கேள்விகளுக்கு விடைதேடுவோம் என்னோடு வாருங்கள் !

தற்போது உலகெங்கும் கிடைக்கும் எரிபொருட்கள். இன்னும் 50 வருடங்களுக்கு மட்டுமே தாங்கும். அதன்பின் என்ன செய்ய ? மாற்று எரிபொருட்களுக்கான தேவையும், அவசியமும் அதிகமாகிவிட்ட சூழலில், உலக நாடுகள் அனைத்தும் மண்டையை பிய்த்துக்கொண்டு மாற்று எரிபொருளுக்காக அலைந்துக்கொண்டிருக்கிறார்கள். மாற்று எரிபொருளை கண்டுபிடிப்பது பிரச்சினை அல்ல ! கண்டுபிடித்ததை வைத்து புழக்கத்தில் இருக்கும் வாகனங்களை இயக்க முடியுமா என்பதுதான் பிரச்சினை !

புதிய எரிபொருளோ, அல்லது வேறொரு ரூபத்தில் ஆற்றலையோ உருவாக்கும்போது, நம்முடைய பழைய என்ஜின்கள் அதற்கு செட் ஆக வேண்டும். அப்படி செட் ஆகவில்லை என்றால், கிட்டத்தட்ட 150 வருடங்களாக தயாரித்த கோடிக்கணக்கான பெட்ரோல், டீசல் வண்டிகளை என்ன செய்வது ? இதுதான் இப்போது கண்முன் நிற்கும் பெரிய கேள்வி ! பழைய வண்டிகளையும் இயக்க ஏதுவாக மாற்று எரிபொருளை தேடும் அதே நேரத்தில் சுற்றுசூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் புதிய எரிபொருள்களை கண்டுபிடித்து இனி தயாரிக்கப்போகும் வாகனங்களிள் அமைக்க கடும் பிரயத்தனம் செய்துக்கொண்டிருக்கிறார்கள் !

இந்த முயற்சியில் இதுவரை கண்டுப்டிக்கப்பட்டுள்ள சில மாற்று எரிபொருட்களை பார்ப்போம்.

எத்தனால் – Ethanol

எத்தனால் என்பது என்ன ? சாட்சாத் எரிசாராயம்தான். தற்போது பெட்ரோலுக்கு மாற்றாக யோசித்துக்கொண்டிருக்கும் விஷயங்களில் இதுவும் ஒன்று ! நேரடியாக எத்தனால் ஊற்றி வண்டி ஓட்ட முடியாது. அதனால் எத்தனாலுடன் பெட்ரோலை கலந்து உபயோகிக்கலாம் என்கிறார்கள் !

இயற்கையில் கிடைக்கும் Nature Gas

நேச்சுரல் கேஸ் உபயோகப்படுத்தலாம் என்பது இன்னொரு ஐடியா ! உலகமெங்கும் பரவலாக கிடைக்கிறது என்பதால் இதை வைத்து கொஞ்ச காலம் ஓட்டலாம் ! இதில் உள்ள ஒரு குறை என்னவெனில், தற்போது உள்ள பெட்ரோல் / டீசலைவிட சுற்றுசூழலுக்கு கேடு விளைவிக்கக்கூடியது ! இன்னொரு மைனஸ் இப்போது புழக்கத்தில் உள்ள வண்டிகளுக்கு இந்த நேச்சுரல் கேஸை உபயோகிக்க முடியாது !

மின்சார வாகனங்கள் – Electric Vehicles

மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை பற்றி நாம் ஏற்கனவே நிறைய பார்த்திருக்கிறோம். அதனால் அதை தாண்டி அடுத்தென்ன என்று பார்ப்போம் !

ஹைட்ரஜன் ஃப்யுவல் செல்ஸ் - Hydrogen Fuel Cells

 “ஹைட்ரஜன் ஃபியுவல் செல்ஸ்” hydrogen Fuel Cells !  ஹைட்ரஜனை நீரில் இருந்து பிரித்து எடுத்து அதை எரிபொருளாக உபயோகப்படுத்தும் முறை. சுருங்க சொல்ல வேண்டும் எனில், வெறும் தண்ணீரில் வாகனங்களை இயக்கலாம்! சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படுத்தாத எரிபொருள். இதன் மைனஸ் என்னவெனில் சட்டென தீப்பிடிக்கும் குணம் கொண்டது என்பதால் விபத்துகளுக்கான வாய்ப்பு அதிகம், அதற்கு தகுந்தாற்போல எஞ்சின்கள் செய்யப்பட வேண்டும், பழைய வண்டிகளில் உபயோகிக்க முடியாது என்பது இன்னொரு மைனஸ்!

பயோ டீசல் – biodiesel

பயோடீசல் என்பது வெஜிடபிள் ஆயில்கள், மிருக கொழுப்பில் கிடைக்கும் எண்ணெய், மற்றும் ஹோட்டல்களில் பயன்படுத்திவிட்டு கீழே கொட்டும் எண்ணெய்கள் போன்றவைகளை கொண்டு உருவாக்கப்படுகிறது! மற்றவைகளில் இல்லாத ஒரு சிறப்பு பயோடீசலில் உண்டு, மற்ற எரிபொருள்களுக்கு அந்தந்த தன்மைக்கு ஏற்றவாறு வண்டி என்ஜினை புதியதாக தயாரிக்க வேண்டும், ஆனால், பயோ டீசலை பொறுத்தவரை நாம் அல்ரெடி உபயோகப்படுத்திக்கொண்டிருக்கும் வண்டிக்கும் engine ஐ modify பண்ணாமல் உபயோகப்படுத்தலாம் !

இன்னும் நிறைய முறைகளை முயற்சித்துக்கொண்டிருக்கிறார்கள். எது கைகொடுக்கும் என்று தெரியவில்லை. பார்ப்போம்.