மிருக கலவைகள் (Hybrid Animals)
அதென்ன மிருக கலவைகள்? தலைப்பே வித்தியாசமா இருக்குல்ல! ஆமாம்! மேட்டரும் வித்தியாசமானதுதான்.
மிருகங்களோடு மிருகங்களாய் காட்டில் உறுமியவாறு அலைந்துக்கொண்டிருந்த ஹோமோ சேபியன்ஸ் எனும் மிருகம் மட்டும் பரிணாம வளர்ச்சியில் சிந்திக்கும் திறன் பெற்றது. “ஏன்? எதற்கு? எப்படி?” என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்தது. அதன் விளைவாக அந்த மிருகத்திடம் தேடல்கள் உருவாகியது.. எது நல்லது எது கெட்டது என்றெல்லாம் பகுத்தாய கற்றுக்கொண்டது.
உணவுக்காக காடுகளில் சுற்றியலைந்த கூட்டம் விஷச்செடிகளையும் கனிகளையும் தின்று, அதில் உயிரிழந்து, அதைக்கண்ட அடுத்தவன் அதை உண்ணாமல் தவிர்த்து தன் வாரிசுகளுக்கும் சொல்லிக்கொடுத்து இப்படியாக தன் வம்சத்தை நீட்டித்துக்கொண்டு வாழ்தலில் வென்றது.
அந்த மிருகம்தான் மனிதன்!

முதலில் நெருப்பென்பது மனிதனுக்கு பயத்தை தரும் ஒரு சங்கதியாகத்தான் இருந்தது. என்றோ ஒருவன், வேட்டையாடிய விலங்கை தூக்கி நெருப்பில் போட! அது நெருப்பில் வெந்த பிறகு சாப்பிட மிருதுவாகவும் சுவையாகவும் இருக்க. “அட! இது செமையா இருக்கே..” என்றெண்ணி, வேட்டையாடிய விலங்கோடு அடுத்த நெருப்புக்காக நெருப்புக்காக காத்திருக்க ஆரம்பித்தான்.
அவனைவிட அறிவான ஒருவன், மரங்கள் இரண்டு உராயும்போது நெருப்புப்பொறி வருவதை காண! இரண்டு காய்ந்த கட்டைகள், அல்லது கற்களை கொண்டு நெருப்பு மூட்டினான்.
நெருப்பை உருவாக்கி கட்டுப்படுத்த தெரிந்த முதல் மற்றும் கடைசி உயிரினம் மனிதன்தான். மற்ற விலங்குகள் நெருப்பை கண்டு பயப்பட! “அட! சமைக்கவும், நம்மை பாதுகாக்கவும் நெருப்பு இன்றியமையாத ஒன்றாக இருக்கிறதே” என அதை உருவாக்கி கட்டுக்குள் கொண்டுவரும் வித்தையை அறிந்தவன் மனிதன்தான்!
இதன்பிறகு மனித அறிவு, காட்டுத்தீ பரவுவதை போல மென்மேலும் விரிவடைந்தது. மனிதனின் அடுத்த ஆகச்சிறந்த கண்டுபிடிப்பு சக்கரம். ஆமாம்.. சக்கரம் இல்லையென்றால். இன்று இருக்கும் எந்த அறிவியல் முன்னேற்றமும் வந்திருக்காது. ஆழ்ந்து யோசித்துப்பாருங்கள்.. புரியும்.
டாபிக் மாறுது.. ஒரு யூ டர்ன் போடுவோம்...
இப்படி பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய மனிதன். தன சுயநலத்துக்காக, இரண்டு விலங்குகளை சேர்த்து, இனக்கலப்பு செய்து புதிதாக ஒரு விலங்கை உருவாக்கினால் என்ன? அது நமக்கு எப்படி பலன்தரும் என்று யோசித்தான்... அதன் விளைவாகத்தான் மிருக கலவைகள் என்றொரு சங்கதி சாத்தியமானது.
மனிதன் முதன்முதலாக வேட்டைக்கு பயன்படுத்தியது ஓநாய்களைதான்! அளவில் பெரிதாகவும், வலுவானதாகவும் இருந்த ஓநாய்கள் வேட்டைக்கு பெருமளவு உதவின. சமயங்களில் ஓநாயின் அளவுகடந்த வெறித்தனம் மனிதனை சற்று பயமுறுத்தியது. வேட்டையாடும் மிருகத்தில் கிட்டத்தட்ட பாதி அளவை ஓநாய்களுக்கே உணவாக கொடுக்க வேண்டிய சூழல் இருந்தது. சில நேரங்களில் பசி அதிகமாகி ரத்தவெறி தலைக்கேறிய ஓநாய்கள், தன எஜமானர்களையே கொன்று தின்ன ஆரம்பித்தது. மனிதன் ஓநாயிடம் பயந்தான்.
வேட்டைக்கு ஓநாய் தேவை. ஆனால் அது கொடிய மிருகம்.. இதற்கென்ன மாற்று என யோசித்தபோது. கொடுத்ததை சாப்பிட்டுக்கொண்டு, காலடியில் வாலாட்டிக்கொண்டிருந்த நாய்கள் மனிதனை கவர்ந்தது. நாய்களின் நன்றி விசுவாசம் பற்றி சொல்ல வேண்டியதில்லை!
அதனால், ஓநாய்களுடைய திறனும், வீட்டு நாய்களுடைய விசுவாசமும் இணைந்த ஒரு உயிர் மனிதனனுக்கு தேவைப்பட்டது. அதன் விளைவாகத்தான் நாம் இன்று பார்க்கும் “German Sheppard” எனப்படும் நாய்கள் இனம் உருவானது. இதில் கிட்டத்தட்ட 20 க்கும் மேற்பட்ட வகைகள் உண்டு என்கிறார்கள்.

இதிலிருந்து தொடங்கிய மிருக கலப்புகள். ஆண் கழுதையும் பெண் குதிரையையும் கலப்பது, ஆண் குதிரை, பெண் கழுதை கலப்பு என ஏகப்பட்ட முயற்சிகளை முன்னெடுக்க ஆரம்பித்தது. மனிதனுக்கு தேவை அதீத சுமையை தூக்கிக்கொண்டு வேகமாக ஓடும் ஒரு உயிரிணம். இதில் அவன் செய்த மிக்சிங்கில் கிடைத்ததுதான் கோவேறு கழுதை எனப்படும் விலங்கு. ஆங்கிலத்தில் “Mule” என்பார்கள்.
ஆய்வாளர்கள் எதிர்பார்த்த அளவுக்கு வேகமாக ஓடவில்லை என்றாலும், கோவேறு கழுதைகள் வேகமாகவும் திறன் மிகுந்ததாகவும் இருந்தது என்பதும் உண்மை! ஆனால், அவைகளால் தன் இனத்தை விரிவுபடுத்த முடியாது. காரணம். ஒரு குதிரையும் கழுதையும் இணைந்தால் மட்டுமே கோவேறு கழுதை பிறக்கும். இரண்டு கோவேறு கழுதைகள் இனப்பெருக்கம் செய்ய முடியாது!

கோவேறு கழுதை (Mule)
உயிரினங்களின் அடிப்படையான கலவி இல்லாத வாழ்க்கை..! எத்தனை கொடுமை! இது போன்ற ஹைப்ரிட் உயிரனங்களுக்கு செக்ஸ் உணர்வு இருக்குமா? தெரியவில்லை..! அதுசரி! சக மனிதனின் உணர்வுகளுக்கே மதிப்பளிக்காத மனிதன், மிருகங்களின் உணர்வுகளையா கண்டுக்கொள்ள போகிறான். இதன்பின் ஹைப்ரிட் அனிமல்ஸ் என்கிற ஆய்வு ஏகப்பட்ட உயிரினங்களை உருவாக்கியது.
இதுபோன்ற ஆராய்ச்சிகளுக்கும் சோதனைகளுக்கும் ஐந்தறிவு ஜீவன்கள் பலியாவதுதான் கொடுமை! அதிலும் பெருங்கொடுமை இது போன்ற கலப்பினங்கள் இரண்டு விலங்குகளின் குணாதிசயங்களையும் கொண்டிருப்பதால். உணவு பழக்கங்களில் இருந்து எல்லாமே மாறும். தன்னை என்னவென்றே உணர முடியாத கொடுமையான வாழ்க்கையது.
இதுபோன்ற கலப்பினங்களுக்கு “கிமேரா” என்று பெயர்! கிமேரா என்கிற பெயர் ஏன் வந்தது.. அதென்ன கிமேரா? பார்ப்போம்.. கிமேராவுக்கு ஒரு சுவாரஸ்யமான ஃபிளாஷ்பேக் உண்டு. கிரேக்க புராணங்களில் கிமேரா என்கிற ஒருவகை விலங்கு வருகிறது. அதன் தலை சிங்கமாகவும், வால் பாம்பாகவும், முதுகில் ஒரு ஆட்டுத்தலையுடனும் கூடிய ஒரு மிருகமது.

கிமேரா (Chimera)
அதைப்பற்றி பண்டைய கிரேக்கர்களின் வர்ணனை பயங்கரமாக இருக்கிறது. கிமேரா வாலில் இருக்கும் பாம்பு கொடிய விஷம் கொண்டதாம், கிமேராவின் சிங்கமுகம் நெருப்பை கக்கும் திறன் கொண்டது என்றும் அடித்து விட்டார்கள். அத்தனையும் அக்மார்க் பொய் என்றாலும். கிமேரா என்கிற கற்பனை விலங்கு மக்களை பயமுறுத்தி நல்வழிப்படுத்த பயன்படுத்தப்பட்டது. பாவம் செய்பவர்களை பயமுறுத்த தேவைப்பட்டது.
சின்ன வயதில் இரவு எங்களை தூங்கவைக்க தாத்தா ஒரு கதை சொல்லுவார். அதில் ஒரு மனிதன் வருவான்! அதைப்பற்றி அவர் இவ்வாறாக விவரிப்பார் “அவன் உயரம் பனைமரத்தைவிட அதிகம்! தலை ஓநாயின் தலை! வாயில் நெருப்பை கக்குவான்! தூங்காம இருக்க குழந்தைகளை தூக்கிட்டு போயிருவான்!” என்கிற ரீதியில் போகும். அப்படி ஒரு மனிதனை பற்றி கற்பனைசெய்துக்கொண்டே பயந்தவாறு தூங்கிப்போவோம்.
அப்படியாக கிரேக்க தாத்தாக்கள் கிமேரா கதையை தன் பேரக்குழந்தைகளுக்கு சொல்லியிருக்க கூடும். .
கிமேரா கற்பனைதான் என்றாலும். இதுதான் முதல் ஹைப்ரிட் உயிரினத்துக்கான வித்து. அதனால், இதுபோன்ற கலப்பின உருவாக்கங்களுக்கு “கிமேரா” என்பது பொதுப்பெயராக உள்ளது.
நிற்க, கலப்பின உயிர்களை உருவாக்குவதால் மனித குலத்திற்கு என்ன நன்மை? வேறெந்த விதத்தில் இது நமக்கு உதவியாக இருக்கப்போகிறது? பார்ப்போம்...
2017 ஆம் வருட கணக்கெடுப்பின்படி, அமெரிக்காவில் மட்டும் 1,18,578 பேர் உடல் உறுப்பு மாற்று சிகிச்சைக்காக பதிவு செய்து காத்திருக்கிறார்களாம். “ஹாஸ்பிடல திறந்தா கிட்னி வேணும், நுரையீரல் வேணும், ஹார்ட் வேணும்” ன்னு கிரி பட வடிவேலு காமெடி போல டாக்டர்களை துளைத்தெடுத்தனர். காத்திருப்பவர்களில் நாளொன்றுக்கு 22 பேர் மாற்று உறுப்பு கிடைக்காமல் இறந்து போகிறார்கள்.
அத்தனை பேருக்கும் உடல் உறுப்புகளுக்கு எங்கே போவது?
“இதற்கென்ன மாற்று” என யோசித்தபோது, மனித உறுப்புகளை மனித உடற்கூருகளோடு மாற்றம் செய்யப்பட்ட ஏதாவது ஒரு விலங்கின் உடலில் மனித உறுப்புகளை வளர்த்தால் என்ன என்று யோசிக்க ஆரம்பித்தார்கள். இதன் நீட்சியாக மனிதனுக்கு கிட்டத்தட்ட நெருங்கிவரும் ஒரு உயிரினமான பன்றியை மனித உடற்கூறுகளோடு மாற்றம் செய்து, அதனுடலில் மனித உறுப்புகளை வளர்க்க திட்டமிட்டிருக்கிறார்கள்.
இதற்காக அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவை சேர்ந்த, “salk Institute” என்கிற நிறுவனத்தை சேர்ந்த டாக்டர்கள் ஜுவான் கார்லோஸ் மற்றும் ஜூன் வூ ஆகியோர் சேர்ந்து, இதற்கான சோதனைகளை மேற்கொண்டனர்.

பன்றியின் கருமுட்டைக்குள் மனித உயிரணு வளரும் படம்
கிட்டத்தட்ட நான்கு வருட ஆராய்ச்சியின் முடிவில் முதற்கட்ட வெற்றியும் பெற்றுவிட்டனர். அதாவது மனிதனுடைய உயிரணுவை ஒரு ட்யுபில் எடுத்து பன்றியின் கருமுட்டைக்குள் செலுத்தி அதை வளரவிட்டுப்பார்ப்பதுதான் திட்டம்! பலகட்ட ஆராய்ச்சிகளுக்கு பிறகு கடந்த வருடம் அதை செயல்படுத்திவிட்டார்கள். அந்த உயிரணு கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் “நான் வளர்கிறேனே மம்மி” என இயல்பான வேகத்தில் வளரவும் ஆரம்பித்துவிட்டது. இது முதற்கட்ட மற்றும் புரட்சிகரமான வெற்றி என்கிறார்கள்.
இதன் மூலம் பன்றியின் உடலில் மனித உறுப்புகளை (Human Organs) வளர்த்து மாற்று அறுவைசிகிச்சைக்கு அதை உபயோகிப்பதுதான் திட்டம். ஆரம்பத்தில் ஏகப்பட்ட எதிர்ப்புகள் கிளம்பியது. மனிதனல்லாத வேறு உயிர்களின் உடலில் இருந்து உறுப்பை எடுத்து மனிதனுக்கு பொருத்திக்கொள்வதில் நம்மாட்களுக்கு ஒவ்வாமை இருக்கிறது. அருவருப்பாக உணர்வதாக சொல்கிறார்களாம். யாராவது “போடா பன்னிப்பயலே” அப்டீன்னு சொல்லிருவாங்களோன்னு பயமிருக்கலாம்.. யார் கண்டார்..! ஆய்வுகள் தொடர்கிறது. நாளை என்ன நடக்குமென யாருக்கு தெரியும்? பார்ப்போம்..
கொசுறு செய்தி : பன்றியின் நுரையீரல் மனிதனின் நுரையீரலை போலவே திறனுடன் மனித ரத்தத்தை சுத்தப்படுத்துகிறதாம்..!!
மனிதனால் உருவாக்கப்பட்ட மேலும் சில இனக்கலப்புகளை பார்ப்போம்..
1. லைகர் - Liger ( Male Lion + Female Tiger)
ஆண் சிங்கத்துக்கும் பெண் புலிக்கும் பிறந்த உயிரிணம். இந்த மிருகம் மிகவும் சாதுவானது என்கிறார்கள்
2. டைகான் - Tigon (Male Tiger + Female Lion)
ஆண் புலிக்கும் பெண் சிங்கத்திற்கும் பிறந்த உயிரிணம்.
3. சோங்கி - Zonkey (Zebra + Donkey)
வரிக்குதிரை மற்றும் கழுதை இனக்கலப்பு!
4. ஜேக்லியான் - Jaglion (Male Jaguar + Female Lion)
ஜாக்குவார் மற்றும் சிங்கத்தின் கலப்பு!
5. பீஃபெல்லோ - Beefalo (Buffalo + Cow)
காட்டெருமை மற்றும் பசு இனக்கலப்பு
லியோபான் - Leopon (Male Leopard + Female Lion)
லெபார்ட் மற்றும் சிங்கம் இனக்கலப்பு
இன்னும் இன்னும் நூற்றுக்கணக்கில் இணையத்தில் கொட்டிக்கிடக்கிறது. தேடிப்பாருங்கள்.. வேறு உலகத்துக்கு நம்மை இட்டுச்செல்லும் !

Add a Comment
3 Comments
Ithe humanum iruka
Arumai thagavalkalum athanai ninkal solum vithamum ..inum niraya suvarasiyankaluku kathirukirom... Thodaratum unkal Pani
அருமை. இதன் அடுத்தகட்டம் genetic engineering மூலம் இயற்கையில் இணையமுடியாத இனங்களை இணைக்க முயன்றது. அதைப்பற்றியும் தேடி எழுதலாம்.தாவரங்களில் அது பரவலாக நடக்கிறது.