அதென்ன சைக்கோ? பேச்சு வழக்கில் நாம் சொல்வோம், “என்னடா இது சைக்கோதனமா இருக்கு” என. சைக்கோத்தனம் என்பது ஜஸ்ட் வார்த்தைகளில் சொல்லிவிடக்கூடியது அல்ல.. அது ஒரு கொடூரம்..! சக மனித உயிரை அணுவணுவாக சித்திரவதை செய்து ரசித்து பின் கொலை செய்வதுதான் சைக்கோதனம்...
சைக்கோகளுக்கு எந்த இலக்கும் கிடையாது. கொலைவெறி வந்துவிட்டால் எதிர்ப்படும் எவரும் அவர்களுக்கு எதிரிதான். சரியாகச்சொல்ல வேண்டும் எனில், எதிரி அல்ல... இரை..! சரி, ஏன் கொலைகளை செய்கிறார்கள்? அவர்கள் எவ்வாறு கொலைகாரர்களாக மாறுகிறார்கள்? பார்ப்போம்..
எழுத நிறைய விஷயங்கள் இருக்கும்போது இதை எழுதுவது ஏன் என்று உங்களுக்கு ஒரு எண்ணம் வரலாம். இதை எழுதுவது படிப்பவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கமன்றி வேறில்லை..!

வரலாறு நெடுகிலும் லட்சக்கணக்கான சைக்கோ கொலைகாரர்கள் நிறைந்திருக்கிறார்கள். இரத்தத்தை உறையவைக்கும் கதைகள் ஏராளம் உண்டு. எல்லோரையும் பற்றி விலாவாரியாக பார்க்க முடியாது என்பதால். ஒரு சைகோ கொலைகாரன் என்னவெல்லாம் செய்வான், எப்படி எல்லாம் இருப்பான் என்று அறிந்துக்கொள்ள, சாம்பிளாக ஒருவரை மட்டும் தேர்ந்தெடுத்து அவரை பின்தொடர்வோம், நான் உங்களுக்கு அறிமுகப்படுத்தப்போவது ‘ஆண்ட்ரு சிக்காடில்லோ’ எனும் கொலைகளை ரசித்து ருசித்து... ஆமாம் ருசித்து செய்த ஒரு கொலைகாரனைத்தான்...
“ஆண்ட்ரு சிக்காடில்லோ (Andrei Chikatilo) ” என்கிற உலகப்புகழ்!? பெற்ற கொலைகாரனை தொடர்வதற்கு முன், அவனைப்பற்றி சில விஷயங்களை தெரிந்துக்கொள்ளலாம்...
ஆண்ட்ரு சிக்காடில்லோ, ஒரு ஸ்கூல் டீச்சர். மிக அன்பாகவும் பண்பாகவும் மாணவர்களை கையாள்பவர். சுற்று வட்டாரப்பகுதிகளில் மிக மிக நல்ல பெயர் பெற்றவர். எதிர்படும் சக மனிதர்களை பார்த்தால் தொப்பியை கழற்றி வணங்கிவிட்டு செல்வார். அவ்வளவு மரியாதையான மனிதர்.

ஆண்ட்ரு சிக்காடில்லோ (Andrei Chikatilo)
ஊர்மக்களிடம் சிக்காடில்லோவுக்கு பெரிய மரியாதை உண்டு. சிக்காடில்லோ நேரத்தை அதிகமாக செலவழித்தது நூலகங்களில்தான். எதையாவது படித்துக்கொண்டே இருப்பாராம். இதெல்லாம் சிக்காடில்லோவின் ஒரு பக்கம். அவருக்கு இன்னொரு பக்கம் உண்டு, அதைதான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்...
பின்தொடர்வோமா ?
ஏதோ ஒரு இனம்புரியாத விரக்தியிலும் கோபத்திலும் சாலையில் சென்றுக்கொண்டிருந்த சிக்காடில்லோ கண்களில் பட்டாள் ‘எலினா’ என்கிற சிறுமி. அவளை பார்த்த கணம், சிக்காடில்லோ மனதில் ஏதோ ஒரு வேட்கை தோன்ற, காரைவிட்டு இறங்கிச்சென்று அந்த சிறுமியிடம் பேச்சு கொடுக்கிறான். பெரிய மனிதர் போன்ற தோற்றம் அந்த சிறுமியிடம் நம்பிக்கையை பெற்றுத்தர, மெல்ல பேசியவாறு அவளை ஊருக்கு ஒதுக்குப்புறமாக அழைத்துசென்று பாலியல் பலாத்காரம் செய்ய முற்படுகிறான். அதை எதிர்பாராத அந்த சிறுமி அலற, அலறிய அவள் கழுத்தை நெறித்து கொல்கிறான் சிக்காடில்லோ. இதுதான் அவன் செய்த முதல் கொலை! சத்தம் போடாதே என்று வாயை அடைத்தது கொலையில் போய் முடிந்தது.
ஒருபுறம் அந்த கொலையில் துப்பு துலங்காமல் மர்ம மரணம் என்று அந்த கேஸை மூடிவைத்தனர். இது சிக்காடில்லோவுக்கு வசதியாகப்போக, இன்னொருபுறம் “நாம இப்படி ஒரு தப்பு பண்ணிட்டோமே..” என்கிற குற்ற உணர்ச்சியும் சிக்காடில்லோவை தாக்கியது. “இனி தவறே செய்யக்கூடாது.. இதில் நாம் தப்பியதே புண்ணியம்” என்கிற மனோநிலையில் மீண்டும் தன் வழக்கமான வாழ்வை தொடங்கினான்.
சரியாக இரண்டு வருடங்கள் சிகாடிலோ எந்த கொலையும் செய்யவில்லை. தன் 42 வது வயதில், ஒரு மாலைநேரம் மனதில் இருந்த மிருகம் சட்டென விழித்துக்கொள்ள, அவனுக்குள் வெறி ஏற ஆரம்பித்தது. லைப்ரரியில் உட்கார்ந்து அமைதியாக படித்துக்கொண்டிருந்தவன் வெறிபிடித்தவன் போல எழுந்து லைப்ரரியில் இருந்து வெளியேறுகிறான்.. முற்றிலுமாக தன்னிலை மறந்த சிக்காடில்லோ என்கிற மிருகத்தின் கண்கள் தனக்கான இரையை தேட ஆரம்பித்தது...
மனதுக்குள் ஒரு குரல்... “ நீ கையால் ஆகாதவன், உன்னால் இனி செக்ஸ் வைத்துக்கொள்ளவே முடியாது” என்று தொடர்ந்து ஒலிக்க... “எல்லோரும் செக்ஸ் வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்கிறார்களே.! நமக்கு மட்டும் ஏன் அது சரியாக அமையவில்லை தனக்கு ஆண்மை இல்லையோ...” (ஆண்மை குறைபாடு இருந்ததால் மனைவியிடம் நிறைய அசிங்கப்பட்ட அனுபவமும் அவருக்கு உண்டு என்பது உப செய்தி) என்கிற ஏக்கம், அவமானமாகி பின் கோபமாக உருவெடுத்து, தன் ஆண்மையை நிரூபித்தாக வேண்டும் என்கிற வெறியில் கண்களை சுழலவிட்டது.
அன்றைக்கு சிக்காடில்லோவுக்கு தேவை, தன் செக்ஸ் தேவையை பூர்த்திசெய்துக்கொள்ள ஒரு பெண் மட்டுமே. வெறியோடும் மன அழுத்ததோடும் இருந்த சிகாடில்லோ கண்களில் பட்டாள் லாரிசா என்கிற 17 வயது பள்ளி மாணவி...
மிருகத்தை சற்று அடக்கிக்கொண்டு, நாகரீகமாக அவளிடம் சென்று பேச்சு கொடுத்தான் சிக்காடில்லோ. பள்ளி ஆசிரியர் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, பின் அவள் நம்பிக்கையை பெற்ற சிக்காடில்லோ, ஊருக்கு ஒதுக்குப்புறமாக கூட்டிச்சென்று.. தன் செக்ஸ் ஆசைக்கு வலியுறுத்துமாறு அழுத்தம் கொடுக்க, திமிறிய அந்த பெண்ணை வேறு வழியின்றி கொன்றான்.. (கொன்ற விதம் மிகக்கொடூரமானது.. என்பதால் அதை தவிர்ப்போம்)
ஒத்துழைக்கவில்லை என்கிற கோபத்தில் அவளை தாக்க... உயிரடங்கும் வலியில் அவள் துடிப்பதை கண்ட சிக்காடில்லோவுக்கு ஆண்மை சிலிர்த்துக்கொண்டது. “அட! இதுவரை இப்படி ஒரு பரவச உணர்வை நாம் அனுபவித்ததே இல்லையே..” என்று தோன்ற.. அந்த பெண்ணின் உயிர் துடித்து அடங்குவதை கொண்டாடினான்.
இறந்த சடலத்தை தூக்கி உடலெங்கும் கடித்து இரத்தத்தை சுவைத்து, வானை பார்த்து ஓவென அலறி, தனக்கு ஆண்மை போகவில்லை... இருக்கிறது! என கூப்பாடு போட்டு, பிணத்தை சுற்றி நடனமாடி... இதோ, ஒரு முழுநீள சைக்கோ கொலைகாரனாக உருவாகிவிட்டான் சிக்காடில்லோ! லாரிசா கொலைக்கு பிறகு கிட்டத்தட்ட 12 வருடங்கள் தொடர்ந்து சிக்காடில்லோ செய்த கொலைகளின் எண்ணிக்கை 53!
இந்த தொடர்கொலைகள் போலீசுக்கு மிகப்பெரிய சவாலானது. ஏனெனில், சைக்கோ கொலைகாரர்களை கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதல்ல. காரணம், அவர்களுக்கு எதிரி என்று யாருமே இல்லை. கண்ணில்படும் எவரையும் கொல்வார்கள். பொதுவாக, ஒரு கொலையில் துப்பு துலங்க வேண்டும் எனில், கொலைக்கான காரணம் என்ன? இவருக்கு யாரெல்லாம் எதிரி? என்கிற நூலை பிடித்துதான் விசாரணையை தொடங்க முடியும். எந்த காரணமும் இன்று கேளிக்கையாக கொலை செய்பவர்களை எப்படி கண்டுபிடிப்பது?
சந்தேகத்தின் பேரில் 1978 ல் ‘க்ராவ்சென்கோ’ என்று ஒருவரை கைது செய்த போலீஸ். இவர்தான் கொலைகாரர் என்று கேஸை முடித்தது. அந்த அப்பாவி மனிதருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. சாகும் கடைசி நொடிவரை “நான் கொலைகாரன் இல்லை” என்று அரற்றிக்கொண்டே இருந்தாராம்.
அதன்பின் சில நாட்கள் எந்த கொலையும் நடக்கவில்லை.. போலீசும் மக்களும் நிம்மதியாக அடுத்த வேலைகளை பார்க்கப்போக. மீண்டும் கொலைகள் நடக்க ஆரம்பித்தது. இந்த முறை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டவர். அவமானம் தாங்காமல் தற்கொலை செய்துக்கொண்டார். கொலைகள் மட்டும் நிற்கவேயில்லை..
மக்களும், மீடியாக்களும் காவல்துறையை வறுத்தெடுக்க. காவல்துறை கையை பிசைந்துக்கொண்டு நின்றது. ஒருகட்டத்தில் காவல்துறை தன் தோல்வியை ஒப்புக்கொண்டு, ஒரு மனோதத்துவ நிபுணரிடம் சரணடைந்தது. அவர் “டாக்டர் புகோனோவ்ஸ்கி”
ஒரே முறையில் கொலை செய்பவர்களை வகைப்படுத்த 'சிக்னேச்சர்' என்றொரு வார்த்தையை பயன்படுத்துவர். அதாவது கையெழுத்து! எப்படி ஒரு உடல் சிதைக்கப்பட்டுள்ளது என்பதை வைத்து அது யார் செய்த கொலை என்று கண்டுபிடித்துவிடலாம். டாக்டர் புகோனோவ்ஸ்கி அந்த சிக்னேச்சரை ஆராய்ந்தார். அடையாளங்களை வைத்து, கொலையாளியின் மனோநிலையை கணித்தார். கொலையாளி இப்படிதான் இருக்கூடும் என்று சில பாய்ண்ட்களை அவர் போலீசுக்கு கொடுக்க, போலீஸ் அதை வைத்துக்கொண்டு தேட ஆரம்பித்தது.
அச்சமயம், ஒரு சிறுவனை, ஒரு நடுத்தர வயது மனிதர் கூட்டிக்கொண்டு செல்வதை பார்த்த போலீஸ் ஒருவர், அந்த சிறுவனிடம் ‘யார் இவர்?’ என்று கேட்க, அதற்கு அவன் ‘என் நண்பர்’ என்று பதில் சொல்லியிருக்கிறான். அந்த நடுத்தர வயது ஆசாமி ‘என் ஸ்டூடண்ட்’ என்று சொல்ல.. முரண்பட்ட பேச்சால் சந்தேகம் அடைந்த போலீஸ் அவரை கைது செய்தது. அந்த நடுத்தர வயது மனிதர்தான் சிக்காடில்லோ என்று சொல்லவும் வேண்டுமா என்ன?
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சிக்காடில்லோ, விசாரணையின் போது, “இப்படிதான் இரண்டு நிரபராதிகளை கொன்று விட்டீர்கள், என்னையும் கொன்றுவிடுங்கள்” என்று ஆவேசமாக பேச, மீண்டும் ஒரு தவறு நடந்துவிடக்கூடாது என்று பயந்த போலீஸ் சிக்காடில்லோவை விடுவிக்கும் முன், ‘டாக்டர் புகோனோவ்ஸ்கி கொடுத்த லிஸ்டில் உள்ள ஒற்றுமைகள் உங்களுக்கும் இருந்ததால் சந்தேகத்தின் பேரில் உங்களை கைதுசெய்துவிட்டோம் மன்னித்துவிடுங்கள்’ என்று கூறி நிதானமாக அதை படித்துக்காட்டினர்.
கொலைகாரனை பற்றி டாக்டர் புகோனோவ்ஸ்கி குறிப்பிட்டிருந்தது..
-
கொலைகாரன் இளைஞன் அல்ல.. 40 வயதுக்கு மேல் இருக்கும்.
-
கொலைகாரனுக்கு செக்ஸ் குறைபாடு இருக்கும்.
-
கொலைகாரன் குழந்தைப்பருவம் மிகக்கொடூரமாக இருந்திருக்கும்
-
அன்பு கிடைக்காமல் அல்லாடியிருப்பான்
-
ஆண் பெண் இருவரிடமும் செக்ஸ் வைத்துக்கொள்ளும் பை செக்ஷுவல்
-
திருமணமானவன்
-
மூக்குக்கண்ணாடி அணிந்திருப்பான்
-
பள்ளி ஆசிரியராக இருக்கும் வாய்ப்பு அதிகம்
‘இதை வைத்துக்கொண்டுதான் உங்களை தவறாக கைதுசெய்துவிட்டோம்...’ என்று காவல்துறை அதிகாரி ஒருவர் சொல்ல... அதீத உணர்ச்சிவசப்பட்ட சிக்காடில்லோ.. ‘அதெப்படி என்னைப்பற்றி இவ்வளவு கச்சிதமாக சொல்லியிருக்கிறான்’ என்று கூவி மாட்டிக்கொண்டான்.

போலீஸ் பிடியில் சிக்காடில்லோ
அதன்பின் போலீசுக்கு ஒரு சிரமமும் கொடுக்காமல் செய்த கொலைகள் அத்தனையும் ஒப்புக்கொண்டான். எப்படி கொலைகளை செய்தேன் என்று சர்வசாதரணமாக விளக்கினான்..

மாதிரி பொம்மையை வைத்து விளக்கம் கொடுக்கும் சிக்காடில்லோ

மாதிரி பொம்மையை வைத்து விளக்கம் கொடுக்கும் சிக்காடில்லோ, படம் 2
உண்மையில் சிக்காடில்லோவுடைய குழந்தை பருவம் மிகக்கொடுரமானதுதான். சோவியத் ரஷ்யாவின் ஒரு பகுதியான உக்ரேனியில் பஞ்சம் தலைவிரித்தாடியபோது, உள்நாட்டு போரில் குடும்பம் சிதறிப்போக, உயிர்காத்துக்கொள்ள ஒரு காட்டுப்பகுதிக்குள் சிக்காடில்லோவும் அவன் அண்ணனும் தப்பியோடினார்கள். காட்டை கடக்கும்போது, பெரும்பசி கொண்ட ஒரு மனிதகூட்டம் ஒன்று சிக்காடில்லோவின் கண் முன்னே, அவன் அண்ணனை கொன்று உடலை துண்டுதுண்டாக்கி சாவகாசமாக சமைத்து தின்றது. இந்த சம்பவம் சிக்காடில்லோ மனதை விட்டு அகலவே இல்லை.

நரமாமிசம் தின்னும் கூட்டம் (மாதிரிப்படம்)
வீட்டில் பட்டினி, அப்பா போர்க்கைதி, அம்மாவின் அன்பு என்பது மருந்துக்குகூட கிடைக்கவில்லை.. இப்படி வாழ்ந்த சிக்காடில்லோவுக்கு, திருமணமாகி இரண்டு குழந்தைகள் பிறந்த பின் ஆண்மை பறிபோனது. ஆண்மை இல்லையென மனைவிடம் அவமானம், வேலை செய்த இடத்தில் சக தொழிலாளர்களிடம் அவமானம், பள்ளியில் கூட அவரை கண்டால் மற்றவர்களுக்கு இளக்காரம். இப்படி தான் எதிர்கொண்ட யாருமே தன் மீது அன்பு காட்டாமல் போக, அவனுடைய மொத்த கோபமும் சமூகத்துக்கு எதிராக திரண்டது.
வாழ்க்கை வெறுத்துப்போக, கண்முன் சந்தோஷமாக வாழும் மனிதர்களை வெறுப்புடனும், வெறியுடனும் பார்க்க ஆரம்பித்தான். எதிர்ப்படும் மனிதர்கள் அனைவரும் எதிரியாகிப்போனார்கள்.
நிற்க, அவனெல்லாம் மனிதனா? என்ன ஒரு மோசமான அரக்கன்..! நாமெல்லாம் எவ்வளவு கனிவானவர்கள், நாகரீகமானவர்கள் என்று பெருமிதம் அடைகிறீர்களா? ப்ளீஸ் வெய்ட்... உங்களுக்குள்ளும் எனக்குள்ளும் கூட ஒரு சைகோ கில்லர் தூங்கிக்கொண்டுதான் இருக்கிறான் என்றால் நம்ப முடிகிறதா? ஆதாரத்தோடு விளக்குகிறேன்... திறந்த மனதோடு தொடருங்கள்.
நாகரிக மனிதர்களான நமக்குள்ளும் ஒரு சைக்கோ கில்லர் இருக்கிறான் என்பதை நம்பித்தான் ஆகவேண்டும். ஏனெனில் நான் சொல்லப்போவது முற்றிலும் உண்மை.!
நமக்குள் உள்ள கொடூர கொலைகாரர்கள் வெளியில் வராமல் இருக்க காரணம் என்ன தெரியுமா? நம் சமூக சூழல், சட்டம், அதன் பின்னான தண்டனை. மனிதனாகட்டும் குட்டியூண்டு கொசுவாகட்டும் எல்லாவற்றிற்கும் உயிர் என்பது ஒன்றுதான். கடிக்கும் கொசுவை அடிக்கும்போது நம் மனதில் ஏற்படும் மாற்றங்களை கவனித்திருக்கிறீர்களா? அதன் உடல் நசுங்கி தெளிக்கும் இரத்தத்தை நம்மில் எத்தனை பேர் பழிவாங்கிய திருப்தியுடன் பார்க்காமல் கடக்கிறோம்?

நாமெல்லோரும் வீடியோ கேம்ஸ் விளையாடியிருப்போம், அதில் எதிர்களை சுட்டு வீழ்த்தும் விளையாட்டுகளை எத்தனை பேர் ரசித்து விளையாடியிருக்கிறோம்! அதில் அந்த கிராபிக் கேரக்டர் ரத்தம் சிதறி கீழே விழுவதை ரசித்ததில்லை? சைக்காட்ரிஸ்ட்கள் இவ்வாறாக சொல்கிறார்கள், வன்முறை நிறைந்த திரைப்படங்கள், கேம்ஸ்கள் போன்றவை நமக்கும் இருக்கும் சைக்கோதனத்துக்கான வடிகால்களாம்.
இதய பலகீனமானவர்கள் பார்க்க வேண்டாம் என்கிற தலைப்புடன் வரும் குரூரமான வீடியோவை பார்க்காமல் கடந்தவர்கள் நம்மில் எத்தனை பேர்?
சைக்கோக்கள் பெரும்பாலும் இரத்தத்தை குடிப்பவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். 80 களின் பிற்பகுதியில் எய்ட்ஸ் என்றொரு நோய் இருப்பது தெரியவர, மனித ரத்தம் குடிப்பது குறைந்தது என்கிறது ஒரு ஆய்வு. சில கொலைகாரர்கள் ரத்தம் குடிக்க வழியில்லாமல் தன்னைத்தானே அறுத்து ரத்தம் சுவைக்க ஆரம்பித்து, இரத்த குறைபாடு ஏற்பட்டு மருத்துவமனையில் வீழ்ந்த கதைகளும் உண்டு.
“ச்சே.. என்ன ஒரு கொடூரம்.. இரத்தத்தை மனிதன் குடிப்பானா?” என்கிற கேள்வி வருகிறதா? பென்சில் சீவும்போது கிழித்துக்கொண்ட விரலில் இருந்து வெளியேறும் இரத்தத்தை நாம் என்ன செய்கிறோம்? வாயில் வைத்து சூப்புகிறோம் அல்லவா... அது நாகரிக வேடம் பூண்ட நாம் அல்ல... நமக்குள் இருக்கும் ரத்த வெறி பிடித்த மிருகம்தான்..

பெரும்பாலான சைக்கோ கொலைகாரர்கள் கொலை செய்யும் நேரம் தவிர மற்ற சமயங்களில் நம்மை போன்ற இயல்பு வாழ்க்கைதான் வாழ்ந்திருக்கிறார்கள். கோவிலுக்கு செல்வது, சினிமா பார்ப்பது, சாலையில் அடிபட்டுகிடக்கும் நாய்க்குட்டியை பார்த்து முகம் சுழிப்பது, வேலைக்கு செல்வது என! திடீர் என்றுதான் அந்த கொலைவெறி தோன்றுமாம்.. அந்த நேரம் அவர்கள் கொலை செய்தாக வேண்டும். மரண ஓலமிடும் மனிதனின் குரலை கேட்டாக வேண்டும். அது கொடுக்கும் ஆனந்தத்தை அனுபவித்து பசியாற வேண்டும்.
நம்மைபோன்ற சாதாரண மனிதர்களுக்கு கூட சில சமயங்களில் காரணமே இல்லாமல் ஒரு வெறுப்பு வரும். அந்த வெறுப்பு கோபமாக மாறி எதிர்படும் எல்லோர் மீதும் கோபம் காட்ட தோன்றும். அதற்கு காரணம் மன அழுத்தம்தான் என்கிறார்கள். மன அழுத்தம் அதிகமாக அதிகமாக அங்கொரு சைக்கோ கில்லர் வளர்வான். அதனால் மன அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.
சரி... மனதை காட்டுக்குள் வைக்க என்ன செய்ய வேண்டும்..? நிறைய சிரியுங்கள்.. “வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும்” என்று விவரமில்லாமல் நம் பெரியவர்கள் சொல்லவில்லை. சிரிப்பும் அழுகையும்தான் மன அழுத்தத்தை போக்கி, நமக்குள் இருக்கும் மிருகத்தை காட்டுக்குள் வைக்கும் இரண்டு பெரிய காரணிகள்.
‘அவர் சிரிக்கவே மாட்டார், ஆம்பள அழக்கூடாது' போன்ற மொக்கை பெருமை பேசும் சொல்லாடல்களை தவிர்த்து, சிரிக்கவும் அழவும் செய்யுங்கள். உங்களுக்குள் உள்ள சைக்கோ மிருகம் வெளியேறாமல் மனதுக்குள்ளேயே சமாதியாகிவிடும்.
நாம் சைக்கோ ஆகாமல் இருப்பது இருக்கட்டும். சைக்கோத்தனமான ஆட்களிடம் இருந்து நம்மை எப்படி காத்துக்கொள்வது?
எப்போதும் ஒருவித டிப்ரஷனோடு திரியும் ஆட்களிடம் நெருங்காதீர்கள். அவர்களை திருத்துகிறேன் பேர்வழி என்று நெருங்கி உங்களை அழித்துக்கொள்ளாதீர்கள்... (இதில் பெண்கள் அதிகம்) இவர்கள் எல்லோரும் கொலை செய்ய தைரியமில்லாத சைக்கோக்கள். இந்த வகையறா நம்மூரில் அதிகம், அவர்கள் தன்னை சார்ந்தவர்களை கொடுமைப்படுத்தி, அழவைத்து மகிழ்வார்கள்.
வீட்ல தங்கச்சி நலமா, உன் மனைவி நல்லா இருக்காங்களா? என கேட்கும் எல்லோரும் உண்மையான அக்கரையில் கேட்பவராக இருக்க மாட்டார்கள். மாறாக மனதில் அவர்களை பற்றிய பாலியல் கற்பனைகள் இருக்ககூடும்.
வீட்டுக்குள் அந்நியர்களை சேர்ப்பதை 90% தவிருங்கள். பெரும்பாலான கொலை, கொள்ளை, கற்பழிப்புகள் தெரிந்தவர்கள் மூலமாகத்தான் அரங்கேறுகிறது.
“என்னை நினைவிருக்கிறதா?” என்றவாறு பேச வரும் ஆட்களை இதற்கு முன் பார்த்ததில்லை என்றால், ‘யார் நீ தெரியாதே!’ என்று தைரியமாக பதில் சொல்லுங்கள். தெரிந்தவராகவே இருந்தாலும் நீண்ட நாட்களாக பார்க்காமல் இருந்து,, தவிர்க்க முடியாமல் அவருடன் செல்லும் சூழல் ஏற்பட்டால், அவருடன் வெளியில் செல்கிறேன் என்பதை வீட்டிற்கு போன் பண்ணி சொல்லுங்கள். மாட்டிக்கொள்ள விருப்பமில்லாமல் உங்களை விட்டுவிடக்கூடும்.
எனக்கு தெரிந்தவரை சைக்கோக்களின் குணநலன்களை சொல்லி எச்சரித்துவிட்டேன்... நம்மூரிலேயே ஏன் நம் தெருவிலேயே கூட இதுவரை மாட்டிக்கொள்ளாத சைக்கோ கில்லர்கள் சுற்றிக்கொண்டு இருக்கூட்டும். எப்போதும் அதிகபட்ச விழிப்புணர்வுடன் வாழுங்கள். முக்கியமாக குழந்தைகளுக்கு சொல்லி வளர்த்துங்கள்...
வாழ்க வளமுடன்...

Add a Comment
10 Comments
Idhu sex Nala iruvaana psycho adhu iyalbu dhan Vera edhaudhu different ah na pshyco killer pathi details venum pls
Pls add more information
Very nice, you tell about something
உண்மை இவ்வளவு விவரமாக சொல்ல ஒரு சைக்கோ vala தான் முடியும் ஹாஹா
Thank you for your infomation
Nalla padhivu
Super information Thanks Bro
Very good bala keep going
ஆம் பெண்களில் இப்படியான குணாதிசியங்கள் உள்ளவர்கள் பெரும்பான்மை. எல்லா கணவன்களும் மனைவியால் படும் சித்திரவதைகள் இந்த வகையறா சைக்கோக்கள்தான்.
Excellent,Good information