செயற்கை நுண்ணறிவூட்டல்...! Artificial Intelligence
சரி! அதென்ன செயற்கை நுண்ணறிவூட்டல்? (Artificial Intelligence)

செயற்கை நுண்ணறிவூட்டல் என்பது, சிந்திக்கும் திறன் இல்லாத இயந்திரங்களை சூழலுக்கு ஏற்றவாறு சுயமாக சிந்திக்க வைப்பது. உதாரணமாக மனிதன் மீது “பாம்பு” என்று சொல்லி ஒரு கயிறை தூக்கி எறிந்தால் அவன் என்ன செய்வான்? முதலில் அவன் மூளை அதை பாம்பென நினைக்கும். பயந்து அலறுவான், பின் அது கயிறென தெரிந்தவுடன் அசட்டுச்சிரிப்பு சிரிப்பான், இதே ஒரு ரோபோ மீது பாம்பை தூக்கி எறிந்தால் என்ன செய்யும், “தேமே” என்று நின்றுக்கொண்டிருக்கும்.
ஆனால், அதே ரோபோ, செயற்கை நுண்ணறிவூட்டப்பட்ட பிறகு, நீங்கள் பாம்பை தூக்கி போட்டால் அதிலிருந்து லாவகமாக தப்பும், கயிறை தூக்கி பாம்பென்று போட்டால், போடும்போதே சிரிக்கும்... ஏனெனில், செயற்கை அறிவூட்டிய மெஷின் சிந்திக்கும் வேகம் மிக மிக அதிகம், குறைந்தபட்சம் நம்மை விட 100 மடங்கு அதிகம்.

ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் படிப்படியாக வளர்ந்துவருகிறது. அதில் அட்வான்ஸ்ட் லெவல் போகும்ப்போது அது நமக்கே எதிராக முடியலாம் என்பது “ஐ” யை எதிர்ப்பவர்களின் வாதம்.
கம்ப்யூட்டர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக அறிவு வளர்ந்து வருவதை கவனித்திருக்கிறீர்களா?

சில உதாரணங்கள் பார்ப்போம்.
கூகுளில் நாம் தேடும் சமாச்சாரத்தை, சர்ஜ் ஹிஸ்டரியில் வைத்துக்கொண்டு, நாம் எங்கு போனாலும் நமக்கு அதை கட்டுவது.
எங்கெல்லாம் தினம் போகிறோம் வருகிறோம் என்று லோக்கேஷன்களை ஆராய்ந்து, ஒரு நாள் நாம் தாமத்தித்தாலோ, அல்லது வேறுபுறம் சென்றாலோ, “இதுதானே “Frequent Destination” இதை விட்டுட்டு எங்கய்யா போற” என்று எச்சரிப்பது, மேப் காட்டும் வழியில் இருந்து மாறினால் “தப்பா போறீங்க... இது வழி அல்ல என்று எச்சரித்துவிட்டு, பின், சரி! இந்த பக்கமா போற வழியை காட்டுகிறேன்” என ரீரூட் செய்துக்கொள்வது போன்ற ஜாலங்களை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். இதுவும் கூட “ஐ” யின் ஒரு அங்கம்தானம்.

ஐபோனில் உள்ள ‘SIRI’ கூட ஒரு “ஐ” சிஸ்டம்தான்!

இதெல்லாம் நமக்கு உபத்திரவமில்லாத அன்றாட வாழ்க்கையின் உபயோகங்கள். “ஐ”யின் அதிவேக பாய்ச்சலில் அடுத்து வரப்போகும் டெக்னாலஜிகளை நினைத்தால் பயமாகவும் அதே சமயம் பரவசமாகவும் உள்ளது.
உதாரணத்துக்கு நாம் உபயோகிக்கும் கம்ப்யூட்டரை எடுத்துக்கொள்ளுங்களேன்..! அந்த கம்ப்யூட்டருக்கு அடுத்த கட்டமாக அட்வான்ஸ்ட் செயற்கை நுண்ணறிவூட்டினால் என்னவாகும்...?
தினம் காலை ஆபீஸ் வருகிறோம், பேஸ்புக் திறக்கிறோம், மூடுகிறோம், ஆபீஸ் வேலைகளை பார்க்கிறோம், டீ ப்ரேக்குக்கு வெளியே சென்றுவிட்டு வந்து மீண்டும் சிஸ்டம் வேலை. இடையிடையே, பேஸ்புக் வாட்சப், எதையாவது பார்க்கிறோம்... உங்கள் ஐ கம்ப்யூட்டர் உங்களை கண்காணிக்கிறது.

நாளை நீங்கள் சிஸ்டம் அருகில் வரும்போது, உங்கள் கம்ப்யூட்டர் உங்களிடம் கிசுகிசுக்கிறது “நீங்க ஹேப்பியா பேஸ்புக் பாருங்க. நான் உங்கள் வேலைய முடிச்சிடுறேன்... யூ நோ..! இன்னைக்கு உங்க லவ்வர் கூட ஆன்லைன்ல இல்ல, ஹேப்பியா மத்த கேள் ப்ரெண்ட்ஸ்கிட்ட கடலை போடுங்க..” என்று சொன்னால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்?
சொன்னது மட்டுமல்லாமல், உங்கள் வேலையை முடித்து ரிப்போர்ட் எல்லாம் அனுப்பி உங்கள் எம்டியிடம் உங்களுக்கு பாராட்டும் வாங்கித்தந்துவிட்டு, “டீ டைம்... நல்லா ஸ்ட்ராங்கா டீ குடிச்சிட்டு வாங்க” என்று உங்களை துரத்தினால்.. “ஆஹா இதுவல்லவோ டெக்னாலஜி” என்று வியந்து போவீர்கள் அல்லவா? ஆமாம்..! இதுவும் நாளை சாத்தியமே..
“நல்ல விஷயம்தானே, இதில் என்ன பாதகம்?” என்கிறீர்களா!
பாதகம் என்னவென்றால், உங்கள் வேலை போய்விடும். உங்களை விட 100 மடங்கு ஸ்மார்ட்டான ஒரு டிஜிட்டல் வேலைக்காரன் கிடைத்துவிட்டால் நீங்கள் எதற்கு?
இது அப்படியே வளர ஆரம்பித்து, பின்னொரு நாள் இந்த ரோபோக்கள் சேர்ந்து, ஒரு “டிஜிட்டல் கம்யூனிட்டி” யாக மாறக்கூடும் அபாயம் உண்டு. இதை மையமாக வைத்து சில ஆங்கிலப்படங்கள் கூட வந்திருக்கிறது. ஏன்? நம்மூரிலே உதாரணம் உண்டு, எந்திரன் படத்த்தில் வரும் சிட்டி ரோபோ கேரக்டர் நினைவிருக்கிறதா?

இதெல்லாம் ஏதோ சினிமாவில் வரும் மிகைப்படுத்தப்பட்ட பிக்சன் என கடந்துவிட முடியாது, சமீபத்தில் “சோஃபியா” என்கிற ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் ரோபோவுக்கு சவூதி அரசாங்கம் குடியுரிமை கொடுத்திருக்கிறது. சோபியாவுக்கு ரசிகர்கள் கூட உண்டு! யு ட்யூபில் தேடிப்பாருங்கள்.. சோபியாவின் பேட்டிகள் கொட்டிக்கிடக்கிறது.
‘சோஃபியா’ ஹாயாக சொல்கிறாள். “எனக்கு இந்த சானல்தான் பிடிக்கும்” என..! மேலோட்டமாக பார்த்தால் நமக்கு இது ஒரு செய்திதான். ஆழமாக பாருங்களேன். ஒரு ரோபோ டிவி சேனலை ரசிக்க ஆரம்பித்திருக்கிறது. இனி அது யோசிக்கும், கனவு காணும், வன்மம் பழகும், கொஞ்சம் கொஞ்சமாக வாழும் ஆசை அதிகரிக்கும். அதற்கு இடையயூறாக இருக்கும் மனிதர்களை “நீ யார் என்னை கண்ட்ரோல் பண்ண?” என்று அழிக்க நினைக்கும்.. இதெல்லாம் ஆர்டிபிஷியல் இன்டலிஜென்சை எதிர்ப்பவர்கள்களின் வாதம்.

Sophia the robot ( சோபியா ஐ ரோபோ)
ஆனால் ஆதரிப்பவர்கள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. சமீபமாக மனிதர்களுக்கு அவர்கள் சூழல் புரிந்துக்கொண்டு உதவி செய்யும் ரோபோக்களை தயாரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். எஜமானன் முகபாவம் மாறினால், ஓடிப்போய் என்னாச்சி, எனக்கேட்டு அவருடைய ப்ரஷர், ஷுகர் லெவல் எல்லாம் செக் பண்ணி, அவருக்கு மருந்து மாத்திரைகள் தரும் ரோபோக்கள் வணிக ரீதியாக வரப்போகிறது. இதெல்லாம் அறிவியல் நமக்கு கொடுத்து வரப்பிரசாதம் என்கிறார்கள்.
கண்ட்ரோல் எல்லாம் மனிதர்கள் கையில்தான். மனிதர்களை தாண்டி ரோபோக்கம் ஒன்றும் செய்ய முடியாது என்கிறார்கள். தேவைப்படும்போது நாங்கள் அதை de activate செய்துவிடுவோம். பயப்பட இதில் ஒன்றுமில்லை என்கிறார்கள்.
எதிர்பாளர்களோ!, “நிச்சயம் ரோபோக்கள் உலகை ஆள நினைக்கும். அளவுக்கு மேல் அட்வான்ஸ்டாக ஐயை மெஷின்களுக்கு பழக்குவது அவ்வளவு சரியல்ல” என்கிறார்கள் இதெல்லாம் கண்களுக்கு தெரியும் சாத்தியமான ஆபத்துகள் என்கிறார்கள்.
இதைத்தாண்டி கண்களுக்கு தெரியாமல் நிறைய ஆபத்துகள் உண்டு.
உதாரணமாக
சாலையில் நண்பரோடு சென்றுகொண்டிருக்கிறோம். அப்போது ஏதோ ஒரு பெரிய வண்டு உங்கள் முகத்துக்கு முன்னே பறக்கிறது. என்ன செய்வீர்கள்? கைகளால் துரத்துவோம், அல்லது நாம் விலகிப்போவோம். அப்போதும் அந்த வண்டு நம்மை தொடர்கிறது என்று கொள்ளுங்களேன். அது ஒருவேளை “ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ்” செரிவூட்டப்பட்ட குட்டி எந்திரமாக இருக்கலாம்..!

“குட்டி எந்திரம் என் முகத்துக்கு முன் ஏன் சுற்ற வேண்டும்?” அதன் வேலை அது.. குறிப்பாக உங்கள் முகத்தை தேடிக்கண்டுபிடித்து ஸ்கான் செய்து அதை ஏவியவரிடம் சொல்லும்.. “இவன்தானா பார் ?“ என.. ஏவியவன் “ஆம்” என்று சொன்ன அடுத்த கணம், உங்கள் உடலின் எதோ ஒரு பகுதியை குத்தி உங்களை கொல்லும் விஷத்தை செலுத்திவிட்டு, கொஞ்ச தூரம் பறந்துபோய் “Destroy” ஆகிவிடும். அதற்கு அதன் எஜமானின் கட்டளை அவ்வளவுதான்.
ஆனால் வெளியுலகத்துக்கு? “பாவம்.. நல்ல மனுஷன் ஏதோ விஷ வண்டு கடிச்சி செத்துட்டான்” என்று செய்தியாக மட்டுமே தெரியும்.
“என்னடா கத உடுறியா?’ எங்கள பார்த்தா லூசு மாதிரி தெரியுதா?” என்று கேட்க தோன்றுகிறதா? நீங்கள் கேட்டாலும் நான் சொல்வது கதை அல்ல Near Future நடக்கப்போகும் ஒரு விஷயம். இப்போதே போர் தளவாடங்கள் உற்பத்தியில் ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் முக்கிய பங்ககாற்ற ஆரம்பித்துவிட்டது. சமீபமாக ரஷ்யா தனது முதல் ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் மிஸ்ஸைல் தயாரித்திருக்கிறது. ஆபத்து நேரத்தில் தானாக சிந்தித்து செயல்படுமாம்! Defense க்கு இது அவசியமானது என்பதால், ராணுவ அதிகாரிகள் இதன் சாதகங்களை மட்டுமே பேசுகின்றனர்.

உலகெங்கிலும் இருந்து “ஐ”க்கு எதிர்குரல்கள் ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது. ஆனால் இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் உலக நாடுகள் இதில் “அடுத்தென்ன அடுத்தென்ன ?” என்று பரபரத்துகொண்டிருக்கிறது.
“ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ்” மெஷின்கள் மனித வளர்ச்சிக்கு தேவையா?
தெரியவில்லை... கட்டுப்படுத்தி வைத்துக்கொண்டு இருக்கும்வரை அது வரம்.. கட்டுப்பாடை இழக்கும்போது சாபமாகிவிடக்கூடும்...!
பார்ப்போம்!

Add a Comment
4 Comments
Interesting article with powerful writing. Seems to be the great writer SUJATHA.PL.continue
When we can get the complete AI in our real time
Semma
Intersting