arallel Universe or Multiverse ! - சமமான பல அண்டங்கள் !

நாம் வாழும் இந்த அண்டத்தின் ஒரு டூப்ளிகேட் பிரதி, நம் அண்டத்துக்கு பக்கத்திலேயே இருந்தால் எப்படி இருக்கும் ? அங்கு நாமும், அதாவது நம்முடைய டூப்ளிகேட்டும் வாழ்ந்தால் எப்படி இருக்கும் ? எதோ அறிவியல் புனைவு போலுள்ளதா ?

ஆனால் இது புனைவல்ல... உண்மைதான் ! நாம் வாழும், எல்லையற்று விரிந்துகொண்டே செல்லும் இந்த பிரபஞ்சம் அதாவது யுனிவர்ஸ் என்பது ஒன்று மட்டும் இல்லை.. இதைப்போல நிறைய யுனிவர்ஸ்கள் உண்டு என்கிறார்கள் விஞ்ஞானிகள் !

என்னடா இது ?  நாம் சூரியகுடும்பத்தில் வாழ்கிறோம்.. நம் சூரியக்குடும்பமே நம் ஆயுளுக்குள் அறிய முடியாத ரகசியங்களை உள்ளடக்கியுள்ளது..  அப்பேற்பட்ட சூரியக்குடும்பமே இந்த அண்டத்தில் ஒரு ஒரு குட்டியூண்டு புள்ளிதான். இதே போல பல அண்டங்கள் உண்டு என்றால்.. அதெப்படி சாத்தியம்?

சாத்தியம்தான் என்கிறார்கள்..!  இதுபோல் நிறைய யுனிவர்ஸ் உண்டு, அதுமட்டுமல்ல.. அங்கும் நாம் வாழ்கிறோம் என்கிறார்கள்.. அதைதான் “பேரலல் யூனிவர்ஸ்” என்கிறார்கள். அதை குவாண்டம் இயலில் விளக்குகிறார்கள்.. நிறைய கணக்குகள், பார்முலாக்கள், டைமன்ஷன்கள் என்றெல்லாம் விளக்கி குழப்புகிறார்கள்.

நாம் அந்த அளவுக்கு குழப்பிக்கொள்ள வேண்டாம்.. . விஞ்ஞானிகள் சாத்தியம் என்று கூறிய விஷயங்களை மட்டும் பார்ப்போம்...

 

படம் : நாசா 

இந்த பேரண்டம் எப்படி உருவானது ?

ஒரு பெருவெடிப்பு, அதிலிருந்து சிதறிய துகள்கள் பெரிதாகி தனக்கென பாதையை உருவாக்கிக்கொண்டு, தன்னைத்தானே சுற்றிக்கொண்டே பக்கத்தில் இருந்த தூசு துரும்புகளை எல்லாம் தன்பால் ஈர்த்துக்கொண்டு பெரிதாகி..  இன்று உள்ள நிலையில் தொடர்கிறது...நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்... தொடர்கிறது.. நின்றுவிடவில்லை...!

சரி.. இப்படியே விரிவடைந்துகொண்டே போகும் அண்டம் கடைசியில் என்னவாகும்... ! ஒரு கட்டத்தில் விரிவடைவது நின்று சுருங்க ஆரம்பிக்கும்... சுருங்கி சுருங்கி சின்னதாகி ஒரு கடுகில் ஆயிரத்தில் ஒரு பங்கு அளவுக்கு வந்து.. அழுத்தம் தாங்காமல் மீண்டும் பெருவெடிப்பை நிகழ்த்தி.....   இதுதான் தொடர்ந்து நடக்கிறது என்கிறார்கள்..

புரிகிறதா ?

சரி மீண்டும் பேரலல் யுனிவர்ஸ் மேட்டருக்கு வருவோம்...

சித்தரிக்கப்பட்ட படம்...

எதற்காக பேரலல் யுனிவர்ஸ் என்கிற மேட்டர் வந்தது ?

“இருக்கு ஆனா இல்லை ! “ இதுதான் குவாண்டம் அறிவியலின் ஆதார விதி...! வாசலில் பைக்கை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் வருகிறீர்கள்... சாவியை மறந்து பைக்கில் விட்டுவிடுகிறோம்..! சிலமணி நேரங்கள் கழித்து நினைவு வருகிறது, திடுக்கிட்டு எழுந்து ஓடி பார்க்கிறோம்..! பைக் அங்கு இருக்குமா இருக்காதா ?

இந்த கேள்விக்கு உண்மையான விடை “ தெரியாது” என்பதே! ஆனால் இந்த கேள்விக்கு குவாண்டம் இயலில் வேறுவிதமான பதிலை சொல்கிறார்கள்...  

பதில் 1 : கவலைப்படாதே.. உன்னுடைய பைக் அங்குதான் உள்ளது !”

பதில் 2 : உன் பைக் அங்கில்லை காணாமல் போய் விட்டது !”

குவாண்டம் உலகில் சிங்கிள் ஆன்சர் என்பதே கிடையாது... அங்கு சாத்தியங்கள் மட்டுமே பேசும்... ஒரே நேரத்தில் அங்கு பைக் உள்ளது! இல்லை என்கிற இரண்டுமே உண்மை... முந்திக்கொள்ளும் சாத்தியங்கள் நமக்கு காட்சிகளாகிறது...! சிரிப்பா இருக்கா? இருக்கும்...

பாரலல் யுனிவர்ஸ் மேட்டரில் குவாண்டம் இயற்பியலை வைத்துதான் சில கணக்குகளை போடுகிறார்கள்... நம்முடைய பைக் ஒரு டைம்லைனில் திருடு போகாமல் இருக்கிறது.. இன்னொரு டைம்லைனில் திருடு போய்விடுகிறது... ஆக.. இரண்டுமே உண்மைதானே !

சில உதாரணங்கள் பார்ப்போம்...

என்  25 வது வயதில்,  என்னை பார்த்து சிரித்தவாறே கடந்து போன ஆக்டிவா பெண்ணை தொடர்ந்து போகிறேன்..! இரண்டு வாரங்கள் புன்னகையை மட்டும் பரிமாறிக்கொள்கிறோம்... அடுத்த வாரம் பேச ஆரம்பிக்கிறோம், காதலை சொல்கிறேன்... ஏற்கிறாள்.. திருமணம் முடிக்கிறோம் குழந்தைகள் பிறக்கிறது.. இது ஒரு டைம்லைன்..

அம்மா பார்த்து மணம் முடித்துவைத்த பெண்ணோடு இப்போது வாழ்கிறேன்.. குழந்தைகள், அம்மா, மனைவி குடும்பம் என ! இது ஒரு டைம்லைன்... இந்த டைம்லைனில் வாழ்பவன்தான் உங்களிடம் பேசிக்கொண்டு இருப்பவன்.. சரியா ?

சில மாதங்களுக்கு முன் ஹைவேஸில் ஒரு பெரிய கார் விபத்தில் சிக்க வேண்டியவன் கடைசி கணம் தப்பிப்பிழைத்தேன்.. கடவுளுக்கு நன்றி சொல்லிவிட்டு வாழ்வை தொடருகிறேன்..

நிற்க..

“என்ன சொல்ல வந்துவிட்டு என்ன சொல்கிறாய் நீ ? “ என்கிறீர்களா...

கொஞ்சம் கவனமாக படியுங்கள்...

குவாண்டம் மெக்கானிக்ஸ் இதை வேறுவிதமாக விளக்குகிறது.. அதை போட்டுக்குழப்பினால் மண்டையை பிய்த்துக்கொண்டு இந்த ஆப் பை தூக்கிவிடுவீர்கள்.. அதனால் குவாண்டம் சைன்ஸ் என்றொரு சங்கதி உண்டு என்று மட்டும் புரிந்துக்கொள்ளுங்கள். “ இருக்கு ஆனா இல்ல” என்பதை மட்டும் மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள்... குவாண்டம் அறிவியலின்படி.. அது என்ன சொல்கிறது என்பதை மட்டும் இப்போதைக்கு புரிந்துக்கொள்ளுங்கள்...

சாத்தியம் 1 : நான் ஆக்டிவா பெண்ணை காதலித்து மணந்து குடும்பம் நடத்தி குழந்தைகள் பெற்று வாழ்ந்துக்கொண்டிருக்கிறேன்...

சாத்தியம் 2 : அம்மா பார்த்த பெண்ணை மணந்துக்கொண்டு பிள்ளைகள் பெற்றுக்கொண்டு சந்தோஷமாய் வாழ்கிறேன் (அப்ப உங்களுக்கு ரெண்டு பொண்டாட்டியான்னு கேட்டுடாதிங்க )

சாத்தியம் 3 : நான் மேலே குறிப்பிட்ட கார் விபத்தில் இறந்து போகிறேன்!

சாத்தியம் 4 : லாவகமாக காரை திருப்பி விபத்தை தவிர்த்து பிழைத்துவிட்டேன்...

என்னடா சொல்ற ? நீ லூசா, இல்ல படிக்கற நாங்க லூசுங்களா ? என மண்டை பிய்த்துக்கொல்கிறதா ?

குவாண்டம் அறிவியலின்படி... முந்திக்கொள்கிற சாத்தியங்களே நம் கண்களில் படுகிறது என்கிறார்கள்..

மீண்டும் ஆக்டிவா பெண்! குடும்ப சூழல் காரணமாக நான் அந்த ஆக்டிவா பெண்ணிடம் நெருங்கவே இல்லை.. அவள் என்னைக்கண்டு சிரித்தாலும் நான் அவளை தவிர்த்தேன்...! அதனால் இப்போதுள்ள இந்த கரண்ட் டைம்லைனில் அவளுக்கும் எனக்கும் சம்மந்தமில்லை... “இதில் முந்திக்கொண்ட சாத்தியம் என்பது, அவளை கண்டுகொள்ளாமல் விலகியது...

அதேபோல லாரியை நெருங்கும்போது சரியான நேரத்தில் ப்ரேக் அடித்து வண்டியை நிறுத்திவிட்டேன்.. அதனால் விபத்தில் நான் இறந்து போகும் சாதியமும் அடிபட்டு போகிறது... அதாவது இந்த டைம்லைனில் மட்டும்...

சரி.. இரண்டு சாத்தியங்களும் உண்மை என்கிறீர்களே... அது எப்படி ?

அதைதான் அறிவியலில் “பேரலல் யுனிவர்ஸ்” என்று தனியாக பிரிக்கிறார்கள்.. குவாண்டம் அறிவியல் உலகில் ஊடுரிவிப்பார்த்தால் பேரலல் யுனிவர்ஸ் மேட்டர் புரியும்... அதையும் முடிந்த அளவு ஆராய்வோம் அடுத்தடுத்த பகுதிகளில்...

நம் வாழ்வில் கடக்கும் ஒவ்வொரு நொடியும் எங்கு சென்று மறைகிறது..? எங்கும் சென்று மறையவில்லை.. நாம் அதைக்கடந்து வருகிறோம்... அந்த டைம்லைனில் அது அப்படியே உறைந்து கிடக்கிறது...!

நாம் வாழும் முப்பரிமான உலகில் நம்மால் உணர முடியாத சங்கதிகள் நிறைய உண்டு..! நேரம்தான் நான்காவது பரிமாணம் என்கிறார்கள். ஐந்து, ஆறு என அடுத்த பரிமாணங்கள் எப்படி இருக்கும் என்றுகூட நம்மால் சிந்திக்க முடியாது. மொத்தம் 11 பரிமாணங்கள் உண்டாம் !

சரி மேட்டருக்கு வருவோமா ?

நான் அந்த ஆக்டிவா பெண்ணை மனம் புரிந்துக்கொண்டது உண்மை..! ஆனால் Multiverse எனப்படும் இன்னொரு பாரலல் யுனிவர்ஸில் அவளோடு குடும்பம் நடத்திக்கொண்டிருக்கிறேன்... அந்த சாத்தியம் வேறு ஒரு பிரபஞ்சத்தில் இருக்கிறது... வேறொரு டைம்லைனில் உள்ளது..

ப்ரேக் பிடிக்காமல் காரை கொண்டுபோய் லாரியில் சொருகி உயிரை விட்டுவிட்டேன்.. இது வேறொரு பேரலல் யுனிவர்ஸில் சாத்தியம்.. அது வேறொரு டைம்லைன்

இதை நான் சொல்லவில்லை அறிவியல் சொல்கிறது...

இன்னும் சில உதாரணங்கள் பார்க்கலாம் அபத்தமாக இருக்கும்... அட்ஜஸ் பண்ணிக்கோங்க..

என் அம்மா அப்பா சந்திக்காமல் போயிருக்கலாம்...  அப்பா வேறு பெண்ணை மணந்திருக்கலாம், ஹார்ட் அட்டாக் வந்து சாகாமல் ஆரோக்கியமாக வாழ்ந்துக்கொண்டிருக்கலாம் , அங்கு கணேசன் என்பவருக்கு நான் மகனே அல்ல... அது வேறு சாத்தியங்கள் வெவ்வேறு டைம்லைன்கள் ! இப்படி மனிதனாக பிறந்த எல்லோருக்கும் உண்டு...

இதைதான் குவாண்டம் இயல் சத்தியம் செய்து சொல்கிறது...

ஒரு பெரிய நோட் போல நம் அண்ட வெளியில் பிரபஞ்ச்சங்கள் கொட்டிக்கிடக்கிறதாம்...! ஒவ்வொரு பக்கமும் ஒவ்வொரு பிரபஞ்சம்  அடுத்தடுத்த பக்கங்கள் அடுத்தடுத்த சாத்தியங்கள்...

குழப்புகிறதா..

தொடருங்கள்.. முடிந்த அளவு இயற்பியல் கோட்பாடுகளை விளக்கி புரியவைக்க முயல்கிறேன்...

அடுத்த பாகம் : பாரலல் யுனிவர்ஸ்” அறிவியல் சாட்சிகளும், அதன் விதிகளும் !