“Hallucination” ஹாலுசினேஷன்

“Hallucination” என்றால் என்ன? அதைப்பற்றி விரிவாக பார்க்கும் முன், சில சம்பவங்களை பார்ப்போம். வாருங்கள்...

சம்பவம் 1

“நைட் வேலை முடிச்சிட்டு வீட்டுக்கு வர லேட்டாயிருச்சிப்பா.. நான் மட்டும் தனியா வரேன். கும்மிருட்டு, மழை, ஸ்ட்ரீட் லைட்ஸ் எதுவும் எரியல... கடவுள நினைச்சிகிட்டு நடந்து வரேன்.. திடீர்ன்னு பிரகாசமான ஒளி என் முதுகுக்கு பின்னாடி.. என்னன்னு பார்த்தா...! அம்மன் எனக்கு துணையா வந்துகிட்டு இருக்காப்பா..”

கண்களை அகல விரித்து சிலிர்ப்போடு இதை சொன்னவர், பொய் பேசத்தெரியாத, பேச அவசியம் இல்லாத மனிதர். ராணுவத்தில் பணியாற்றியவர். சொல்வது உண்மையா பொய்யா?

சம்பவம் 2

நண்பர் ஒருவருக்கு நேர்ந்த சம்பவம்.. அவர் பார்வையிலேயே பார்ப்போம்,

"பதின்ம வயதுகளில் அப்பா இறந்த சமயம், பின்னிரவுகளில் காதருகே அப்பா என்னை பெயரிட்டு அழைப்பது தெள்ளத்தெளிவாக கேட்கும். “அப்பா” என்று ஆசையாசையாக எழுவேன். அப்பா படத்தில் மாலை தொங்கிக்கொண்டிருக்கும். சற்று பயம் கவ்வ, தலையோடு போர்த்திக்கொண்டு படுப்பேன், மீண்டும் அப்பா அழைப்பார்..

வாரிச்சுரிட்டிக்கொண்டு எழுவேன்.. இம்முறை சமையற்கட்டு வாசலில் அமர்ந்து புகைத்துக்கொண்டிருப்பார். கண்களில் அப்பா உருவம் தெளிவாக தெரியும். தலையை திருப்பிப்பார்த்து... சிரித்துக்கொண்டே தலையசைப்பார்... அருகில் வரச்சொல்வார், தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, நெருங்கி தொட முயன்றால் அப்பா உருவம் பிசிக்கலாக இருக்காது, கை அப்பாவை துளைக்கும்.. உடல் நடுங்கும். உருவம் கரைந்து போகும். இது என்ன? அப்பாவின் ஆவியா? தெரியாது..! ஆனால் நான் சொல்வது அனைத்தும் உண்மை. இதெல்லாம் எனக்கு நடந்தது!" என்று முடித்தார்... 

இதெற்கென்ன காரணம்? அது அவருடைய ஆவியா?

இல்லை.. இதைதான் அறிவியல் "ஹாலுசினேஷன்" என்கிறது.  சாமியாடுவது, பேயாடுவது, அதீத கோபத்தில் கத்துவது, இதெல்லாம் ஹாலுசினேஷன்தான். சாமியாடுபவர்களை கவனித்துப்பாருங்களேன், பெரும்பாலும் மரியாதை மறுக்கப்பட்டு, அடிமையாக நடத்தப்படும் பெண்களாகத்தான் இருப்பார்கள்!  சாமியாடும்போது கிடைக்கும் மரியாதை, அவர்களுக்கு அதீத பரவசத்தை கொடுக்கும். அந்த சமயங்களில் வரைமுறை இல்லாமல் எல்லோரையும் திட்டவோ அடிக்கவோ முடியும்! அவர்கள் ஆழ்மனம் சாந்தி அடையும்போது அவர்கள் அந்த ஹாலுசினேஷன் எனும் மாயையில் இருந்து வெளியேறுகிறார்கள்... 

ஒரு சமயம் சாமியாடும் அக்கா ஒருவரிடம், கேட்டேன், "எப்டிக்கா இப்படி?" என்றேன்  “நான் என்ன பண்ணினேன்  ஆத்தா கண்ணுக்கு தெரிஞ்சாடா.. அதுக்கு பிறகு என்ன செஞ்சேன்ன்னே தெரியல!” என்றார். “மாமியார வாடி போடின்னு சொல்ற?” என்றேன்... நிஜமாவாடா... அப்டியா சொன்னேன் ?” என கண்களை விரித்தவர்...”ஆத்தா சொல்லிருக்கா நானில்லை” என்று பரவசமடைந்தார். இது அவர்களுக்கு ஒரு கவசம்.. இதெல்லாம் சாமியா சொல்கிறது ? நிச்சயமாக இல்லை.. இதென்ன..? ஹாலுசினேஷன்தான்..!

அறிவியல் முன்னேற்றம் வரும் வரை, இதெல்லாம் அமானுஷ்யம்தான். ஆனால், இது மாயமல்ல மந்திரம் அல்ல, நம் மூளை செய்யும் ஜாலம் மட்டுமே!

இனி ஹாலுசினேஷன் பற்றி சற்று விரிவாக பார்ப்போமா? ஹாலுசினேஷனில் பலவகை உண்டு. அதில் முக்கியமான இரண்டை மட்டும் பார்ப்போம்.

  1. Visual hallucinations
  2. Auditory hallucinations

 

“Visual hallucinations” கண்ணெதிரில் பிசிக்கலாக இல்லாத ஒன்றை, நம் மூளையே நமக்காக உருவாக்கி, இருப்பதை போல காட்டுவதுதான் விஷுவல் ஹாலுசினேஷன்.

சூது கவ்வும் படம் பார்த்திருப்பீர்கள், அதில் விஜய் சேதுபதிக்கு இந்த பிரச்சினைதான். ஒரு பெண் தன்னுடனேயே இருப்பது போல ஒரு கற்பனை உலகில் வாழுவார். அந்த படத்தில் வரும் இன்னொருவர் ஏக்கமாக விஜய் சேதுபதியிடம் கேட்பார் “என்ன பண்ணா பாஸ் இந்த நோய் வரும்? ” என.

இதைதான் நான் முதலில் சொன்ன நண்பரின் அப்பா அனுபவத்திருக்கிறார். அவரிடம் கடவுள் பேசியதில்லை, ஏனெனில் நம் மனம் கடவுளை பேச அனுமதிப்பதில்லை. கடவுள் நம்மை நோக்கி கேள்வி கேட்பதை நாம் விரும்புவதே இல்லை. நாம் மட்டுமே பேச வேண்டும். அதுவும் என்ன பேசுகிறோம்? “எனக்கு அதை பண்ணு இதை பண்ணு” என்கிற கோரிக்கைகள்தானே...

மூளைதான் நம்மை ஏமாற்றி இந்த ஜாலங்களை செய்கிறது! அதற்கான காரணம் என்ன? நாமும் கேள்வியாகவே கேட்கலாமே..

“என்ன பண்ணினா பாஸ் இந்த நோய் வரும்?”

அதீத டிப்ரஷன், மூளை சோர்வடையும் அளவுக்கு யோசிப்பது, தொடர்ந்து ஒரே விஷயத்தை சிந்தித்துக்கொண்டே இருப்பது.. இது போன்ற காரணிகள்தான் ஹாலுசினேஷன் ஏற்பட காரணம் என்கிறார்கள். எளிமையாக சொல்ல வேண்டும் எனில் ஆங்கிலத்தில் மெண்டல் இல்னஸ் என்பார்கள், தமிழில் கிறுக்குத்தனம் எனலாம்.

இந்த கிறுக்குத்தனத்தை தனக்கான ஆயுதமாக வைத்துக்கொண்டு, கடவுளே என்னை தேடி வந்துவிட்டார் என்றெண்ணி, அதை தனக்கு மட்டும் ஆண்டவன் கொடுத்த வரமாக நினைப்பவர்களை என்ன செய்ய முடியும்..?

அடுத்து நண்பரின் கேஸ், அவருக்கு விஷுவலுடன் ஆடிட்டரி ஹாலுசினேஷனும் சேர்ந்துவிட்டது. இரண்டும் சேர்ந்து ஒரு கட்டத்தில் “அப்பா அப்பா” என்றலற ஆரம்பித்துவிட்டார், மனதுக்குள் பேசிக்கொண்டே இருப்பாராம்.. இரவெல்லாம் உடல் நடுங்கும் அளவுக்கு காய்ச்சல் அடிக்க, சுற்றி அவருடைய அம்மா அக்கா எல்லோரும் அமர்ந்து சாமியை கும்பிட்டுக்கொண்டு இருப்பார்களாம். இவர் பைத்தியம் போல அவர்களை பார்த்து சிரிப்பாராம்.

அந்த சமயம், அதிர்ஷ்டவசமாக அவருக்கு காய்ச்சல் வர, ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டார். இடம் மாறியதால் ஏற்பட்ட மனமாற்றத்தாலும், அப்சர்வேஷனில் நிறைய தூங்க வைக்கப்பட்டதாலும் கொஞ்சம் கொஞ்சமாக தெளிந்து வெளியே வந்தார்..  அப்பாவுக்கு பின் நம்மை நம்பி நம் குடும்பம் இருக்கிறதே என்கிற எண்ணமும் அவரை கொஞ்சம் சீர்செய்ய, அவரைப்பா அவரைவிட்டு மெல்ல விலகிவிட்டாராம்...

ஆரம்ப கட்டம் என்றால் நான்கைந்து நாட்களுக்கு தூக்க மாத்திரையை சாப்பிட்டு விட்டு படுத்தாலே போதும். முற்றிப்போனால்தான் பிரச்சினையே! “A beautiful mind” என்றொரு ஆங்கிலப்படம் உண்டு. நேரம் கிடைத்தால் பாருங்கள், ஹாலுசினேஷனை அவ்வளவு அழகாக படமாக்கியிருப்பார்கள்.

சமீபத்திய ஆய்வில், மூளைக்கு ஒரு கண் உண்டு என்கிறார்கள், அதாவது நெற்றிக்கண்! நம் நடுநெற்றியில் ஒரு கண் இருக்கிறதாம், அதாவது கண்ணுக்கு போகக்கூடிய அத்தனை கனெக்ஷன்களும் அந்த நடுநெற்றிக்கும் போகிறதாம். ஆனால் அதற்கு திறப்பு மட்டும் இல்லை, அதனால் அதை “MINDS EYS”  என்கிறார்கள். அதில் காணும் காட்சிகள்தான் “விஷுவல் ஹாலுசினேஷன்” என்றொரு கூற்றை முன்வைக்கின்றனர். இதில் ஆரம்பகட்டத்தில் உள்ளவர்களுக்கு தூங்க ஆரம்பிக்கும் உறக்கத்திற்கும் விழிப்பிற்க்கும் இடையில் உள்ள “Rapid eye moment”  எனப்படும் REM Sleep சமயத்தில்தான் ஏற்படுகிறது என்கிறார்கள். இதை சரியாக கவனிக்காமல் விட்டால்தான் முற்றிப்போய், நிறைய கற்பனைகளை செய்து, நிறைய உருவங்களை உருவாக்கி, மைன்ட் ஐய்ஸ் எனப்படும் மூன்றாம் கண்களில் காட்சியாக்கிக்கொள்கிறோம்...

ஆவி, பேய் பூதம் என்றெல்லாம் கற்பனையோடு, மந்திரவாதிகளை பார்க்க செல்லும் முன், சைக்காட்ரிஸ்ட்டை பாருங்கள்...